Press "Enter" to skip to content

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்!

அதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-01-1920 – ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார்! மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார்! இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்!

நான் திரு ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம்,ஆராவமுத அய்யங்கார் நடு நிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள்! அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம்! ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் திரு ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார்!
உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார்! அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன! எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம்!
இப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாது! ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும்! பயணக் கட்டணம் 4 அணா! பயணம் செய்வோரும் மிகவும் குறைவு! நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள்!
பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல, பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள்! பயணக் கட்டணம் எட்டணா! போட்டி காரணமாக ஒருநாள் கட்டணத்தை ஓரணாவாகக்குறைத்த தோடு தஞ்சாவூரில் காப்பியும் கொடுத்தார்கள்! இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள்! பேருந்து யாவும் கரி வண்டிகளே!

நான் திரு ஷேக் ஜலாலுதீன், திரு என்.எஸ். இளங்கோ, உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம்! பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர்! சிலர் சைக்கிளில் செல்வர்! இன்னும் சிலர் பட்டுக்கோட்டையிலேயே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிப் படித்தார்கள்!
சேர்மன் ஒரு குதிரை வண்டியும, ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார்! திரு ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும், மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும்!
அக் காலத்தில் பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவு! தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது! அளவு மட்டும் அதிகமாக இருக்கும்! தயிரோடு சாப்பாடு இரண்டணாதான்! நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்! முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே! திங்களன்று வடை, பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள்!

நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்! திரு ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார்! மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார்! நீலாதான் அபோது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை! எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம்! மாணவப் பருவத்தில் திரு ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார்! விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது! அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார்! 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை! அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும்! அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார்! மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது! இதனால் தேர்வு எழுத முடிய வில்லை! பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லை!
பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ, பேருந்தோ கிடையாது! அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம்! திடீ ரென மழை பிடித்துக் கொண்டது! பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை! நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம்!
அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்ப தற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம்! நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது! நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்!” மேற் படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது! அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.
என்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது, அவரும் இறைவனும் எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும்!
நாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான்! ஒருவர் திரு மஜீது! அவரை பி.ஏ. மஜீது என்று தான் அழைப் பார்கள்! மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு! இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள்!
இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும்! இது உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை!
கல்வியும் செல்வமும் ஒரு சேரப் பெற்றிருந்த அதிவீர ராம பாண்டினின் சரியான வாரிசு நம் கல்வித் தந்தை என்று சொன்னால் அது மிகை ஆகாது!


ஹாஜி த. அ. அப்துல் ரசாக்

© Copyright 2024, Ecommerce Business Bureau | Privacy Policy
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.